Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் சத்யநாதன் (68).
கடந்த ஜூலை மாதம் இவரை தொடர்பு கொண்ட ஒருவர், ‘பெங்களூரில் இருந்து ஃபையர்ஸ் செக்யூரிட்டிஸ அதிகாரி எனக் கூறி தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், வாட்ஸ் ஆப் குழுவில் தங்களை இணைத்துள்ளதாகவும், அதில் வர்த்தகம் தொடர்பான தொழில் முறை விவாதங்கள் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதன்படி, சத்யநாதன் அந்த வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்தார்.
அப்போது, அக்குழுவில் இருந்தவர்கள் ‘FYERSHNI’ என்ற செயலியை பதிவிறக்கும்படி கூறியுள்ளனர். சத்யநாதனும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கியுள்ளார். இந்த சமயத்தில், செயலியில் வரும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என அவர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய சத்யநாதன், அந்த செயலியில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளார்.
அதன்படி, கடந்த ஜுலை 7 ஆம் தேதி, ஆன்லைன் வர்த்தக முதலீட்டாளர்கள் கொடுத்த லிங்கில் சென்று, சுமார் 13 வங்கிக் கணக்குகளுக்கு ரூ.3 கோடியே 40 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதனை பின்னர், முதலீடு செய்த பணத்தையும், அதற்கான லாபத்தையும் கேட்டபோது அவருக்கு எந்த பதிலும் அளிக்காமல் அந்த செயலியை அவர்கள் முடக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: கிணறு தோண்டும் போது மண் சரிவு: இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு
தான் ஏமாற்றமடைந்ததை அறிந்து அதிர்ந்து போன சத்தியநாதன், இதுகுறித்து தேசிய இணையவழி குற்ற போர்ட்டலில் (National Cyber Crime Reporting Portal) புகார் அளித்தார். தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவிலும் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இந்த சைபர் குற்ற பின்னணியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (51) என்பவர் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பாலசுப்பிரமணியத்தை கடந்த மாதம் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் (49), எப்சி (35), பஞ்சவர்ணம் (33) ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஆனால், 3 பேரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த மூவரையும் தூத்துக்குடியில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் மூவரும் சைபர் குற்றவாளிகளுக்கு தரகர்களாக செயல்பட்டது தெரிய வந்தது. அதாவது, வங்கி கணக்குகள் தேவைப்படுவதாகவும், அதில் வரும் பணத்தை எடுத்து கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் கூறியதையும் நம்பி அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, மூன்று பேர் மீதும் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN