Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 27 டிசம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி தலைமை செயலகத்தில் மத்திய அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்யிடம், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது,
மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய், மத்திய அரசின் 35 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். அந்த திட்டங்களை புதுச்சேரி அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி இருக்கிறது. மீதமுள்ள திட்டங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரி அரசின் ஒருசில கோரிக்கைகளை கொடுத்துள்ளேன். குறிப்பாக புதுச்சேரிக்கு இரண்டாவது ரிசர்வு பட்டாலியன் போலீஸார் பணி நியமனம் தொடர்பாக ஏற்கெனவே கோப்பு தயாரிக்கப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கோப்புக்கு ஒப்புதல் கேட்டுள்ளோம்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் 88 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 100 தலைமை காவலர்கள் கூடுதலாக எடுப்பதற்கான உத்தரவையும் உள்துறையின் நிர்வாகத்தை நவீனமயமாக்குவதற்கு ரூ.2 கோடியும் கேட்டுள்ளோம். இப்படியான பல்வேறு கோரிக்கைகளை மத்திய இணை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். அவரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் வைக்கும் கோரிக்கைகளை மத்திய அரசு உடனுக்குடன் நிறைவேற்றித் தருகிறது. எனவே நிச்சயம் இந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவார்கள் என்று நம்புகிறேன்.
நம்முடைய பட்ஜெட்டில் கேட்கப்பட்ட நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது. தற்போது காவல்துறைக்கு கூடுதல் நிதி கேட்டுள்ளோம். மத்திய அரசு திட்டங்களுக்கான நிதியை குறித்த காலத்துக்குள் ஒதுக்கித் தருகின்றனர். அதனால் அந்த திட்டங்கள் மிக சரியான நேரத்தில் செய்து முடிக்கப்பட்டு வருகிறது.
100 நாள் வேலை திட்ட வேலை நாட்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு எந்தவித குறையும் வைக்கவில்லை. தேவையான நிதியை தருகிறது.
புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பான கோப்பு மத்திய அரசுக்கு ஏற்கெனவே சென்றுள்ளது. மத்திய அரசு அதனை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. அதனால் அது குறித்து அவரிடம் இங்கு வலியுறுத்தவில்லை.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b