Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.)
முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு , ஆணையர் குமரகுருபரன் இல்லங்களை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடைபெறும். என போராட்ட குழு உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி அறிவித்திருந்தார்.
அதன்படி, தனியார் மயமாக்கலை கைவிடக்கோரியும், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பாரிமுனை சந்திப்பில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற நிலையில் போலீசார் அவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர்.
திருவிக நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 149 வது நாளாக பல்வேறு இடங்களில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இது வரை அரசு தரப்பிலோ மாநகராட்சி தரப்பிலிருந்து எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை எனவே தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.
அனுமதியின்றி பேரணி செல்ல முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து மாநகர பேருந்துகளில் சென்னையில் புறநகர் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் பிராட்வே பேருந்து நிலையத்தில் கூடிய தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தவுடன், பாரிமுனை சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் எவ்வளவு முயன்றும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் பாரதி,
இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து 149 நாட்கள் ஆகிறது.
செவிலியர்கள் போராட்டம் மேற்கொண்ட போது உடனடியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் அறநிலையத்துறையில் பணி நிரந்தரம் செய்துள்ளனர். ஆனால் தூய்மை பணியாளர்களை தற்போது வரை அவர்கள் எதுவும் அழைத்து பேசவில்லை.
தூய்மை பணியாளர்கள் இறந்தாலும் பரவாயில்லை எனக் கூறி அவர்களை சந்தித்து பேசவில்லை. முதலமைச்சர் இல்லம் அமைச்சர் சேகர்பாபு அமைச்சர் கே என் நேரு ஆணையாளர் குமரகுருபன் உள்ளிட்டோர் இல்லங்களை நோக்கி போராட்டம் தொடரும் எனவும், தூய்மை பணியாளர்களுக்கு பதில் அளிக்காமல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கக்கூடாது. மாநகராட்சி துணை மேயர் அழைத்து எங்களிடம் பேசினார். ஆனால் இன்று எங்களை குப்பையில் தூக்கி வீசி உள்ளார்கள்.
உங்களது இல்லம் நோக்கி போராட்டம் மேற்கொள்ள வரும் பொழுது எங்களை ஜெயிலில் அடைத்தாலும் எங்களது போராட்டம் தொடரும் எனவும் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ