Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 27 டிசம்பர் (ஹி.ச.)
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் கடைத் தெருவில் சுற்றித் திரிந்த வெறி நாய் ஒன்று டீ கடைக்கு முன்பாக நின்று கொண்டு இருந்தவர்கள் மீது திடீரென பாய்ந்து கடித்து குதறியது.
அப்போது அந்த நாய் ஆள் உயரத்திற்கு எம்பி குதித்து ஆக்ரோசமாக கடித்ததில் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் கீழ் உதடு முழுமையாக பிய்ந்துள்ளது.
மேலும் அந்த வழியாக சென்ற நீலா என்கின்ற பெண் மீது பாய்ந்த அந்த நாய் அவரது தலையில் கடித்து குதறி உள்ளது.
இதே போன்று சந்திரசேகரன், கலியபெருமாள், ரகுபதி, பாலமுருகன், சாகுல் ஹமீது, ஆனஸ்ட்ராஜ் ஆகியோரை கை, கால், காது உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறி உள்ளது. இதில், காயம் பட்ட அனைவரும் நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கீழ்வேளூர் பேரூராட்சி பகுதி முழுவதும் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் சாலையில் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு வாகனம் மற்றும் நடந்து செல்பவர்களின் மீது விழுவதால் அப்பகுதியில் செல்வதற்கே முடியாத நிலையில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.
பேரூராட்சி நிர்வாகம் சாலைகளில் கவனிப்பாரற்று சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் வெறிப்பிடித்த நாய் எட்டு பேரை கடித்து குதறும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வெறிநாய்கள் தொல்லையால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்பட்டு அப்பகுதி மக்கள் வேதனையை தெரிவித்துள்ளனர்.
மேலும், தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், அவற்றுக்குக் கருத்தடை மற்றும் வெறிநாய் தடுப்பூசி போடவும் பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN