Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 27 டிசம்பர் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெருமாள்கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் வசந்த் (19). இவர் கடந்த 23-ம் தேதி இரவு சுவாமிமலை பகுதியில் நடந்த இரு சக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்தார். இதனையடுத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வது தொடர்பாக வசந்த்தின் பெற்றோரிடம் மருத்துவர்கள் பேசினர்.
அப்போது, அவரது பெற்றோர்கள் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி, பெற்றோர்களின் ஒப்புதலின் பேரில், வசந்தின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிகள், சிறுகுடல், தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
இதில், இதயம் சென்னை தனியார் மருத்துவமனை, ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றொரு சிறுநீரகம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கருவிழிகள் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை மற்றும் கல்லீரல் திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
இந்த உடல் உறுப்புகள் ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறை உதவியுடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, வசந்தின் உடலுக்கு தஞ்சை மருத்துவமனை கல்லூரி முதல்வர் பூபதி மற்றும் ஊழியர்கள் இறுதி மரியாதை செலுத்தி, உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
முன்னதாக, இளைஞரின் இதயம் சென்னை தனியார் மறுத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த 33 வயது இளைஞருக்கு இயதம் பொருத்தப்பட்டு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இதற்காக, இளைஞரின் இதயம் தஞ்சையில் இருந்து சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் 90 நிமிடங்களில் கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN