தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழா கோலாகலம் - ஜனவரி 3-ல் ஆருத்ரா தரிசனம்!
தூத்துக்குடி, 27 டிசம்பர் (ஹி.ச.) தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிவனுக்கு திருவெம்பாவை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவா
தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழா கோலாகலம் - ஜனவரி 3ல் ஆருத்ரா தரிசனம்


தூத்துக்குடி, 27 டிசம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிவனுக்கு திருவெம்பாவை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா டிசம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது.

இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய தினமே ஆருத்ரா தரிசன நாள் ஆகும்.

மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி செய்து படைப்பார்கள்.

அந்த வகையில் சங்கர ராமேஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழாவையொட்டி இன்று (டிசம்பர் 27) மூன்றாம் நாள் விழாவில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடன தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

திருவாதிரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வரும் ஜனவரி 3-ம் தேதி நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / vidya.b