Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 27 டிசம்பர் (ஹி.ச.)
ஹைதராபாத் திரையரங்கம் ஒன்றில் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி வெளியிடப்பட்ட புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்க்க பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் வந்தார்.
அவரின் வருகையை அறிந்து பலர் ஒன்றுகூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சிறை சென்ற அல்லு அர்ஜூன் ஜாமீனில் வெளிவந்தார்.
இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 கோடியை நிவாரணமாக படக்குழு அறிவித்தது.
கூட்டநெரிசல் வழக்கு நம்பள்ளி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக சிக்கடப்பள்ளி போலீசார், நடிகர் அல்லு அர்ஜூன், தியேட்டர் நிர்வாகம், திரைப்பட தயாரிப்பாளர் நிறுவனம் உள்பட 23 பேரின் பெயர்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் திரையரங்கு நிர்வாகம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. 3வது குற்றவாளியாக நடிகர் அல்லு அர்ஜூனின் 3 மேனேஜர்களும், 8வது குற்றவாளியான நடிகர் அல்லு அர்ஜூனின் பவுன்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் 11வது குற்றவாளியாக நடிகர் அல்லு அர்ஜூன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி.சஜ்ஜனார் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், புஷ்பா 2 கூட்டநெரிசல் தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்து விட்டது.
குற்றம்சாட்டப்பட்ட 23 பேரின் பெயர்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை, கடந்த டிசம்பர் 24-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b