Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 27 டிசம்பர் (ஹி.ச)
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் கடந்த நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கியது.
தொடக்க நாட்களிலேயே முந்தைய வருடங்களை விட அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சில நாட்களில் பக்தர்கள் வருகை 1 லட்சத்தையும் தாண்டியது.
பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்ததால் தரிசனத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி உடனடி முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று
(டிசம்பர் 27) நடைபெற்றது.
முன்னதாக கடந்த 23ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட தங்க அங்கி நேற்று மாலை 6.20 மணியளவில் சன்னிதானத்தை அடைந்தது. தொடர்ந்து தங்க அங்கி ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இன்று அதிகாலை 3 மணிக்கு வழக்கம்போல நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. 3.20 மணியளவில் தொடங்கிய நெய்யபிஷேகம் 10 மணியுடன் நிறுத்தப்பட்டது. இதன்பிறகு காலை 10.10க்கும் 11.30க்கும் இடையே மண்டல பூஜை நடைபெற்றது. இந்த சமயத்தில் திரளான பக்தர்கள் சன்னிதானத்தில் குவிந்திருந்தனர்.
மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இதன் பிறகு மாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்பட பூஜைகளுக்குப் பின்னர் இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும்.
இன்றுடன் 41 நாள் நீண்ட மண்டலகாலம் நிறைவடைகிறது.
மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.
Hindusthan Samachar / vidya.b