Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 27 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடியில் குழந்தை வரம் தரும் அற்புதத் திருத்தலமாக விளங்கும் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலானது சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தின் மூலவர் சமேஸ்வரர், அம்பிகை பாகம்பிரியாள்.
இத்தல இறைவனை காசிபர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற்றுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க இவ்வழியே வந்த காசிப முனிவர் இங்கு லிங்கத் திருமேனி எழுப்பி வழிபாடு நடத்தினாராம். உமையாள், சிவபரம்பொருளிடம் திருமந்திரத்தை உபதேசிக்குமாறு கேட்டு, மந்திர உபதேசம் பெற்ற ஊர் ஆதலால், இவ்வூருக்கு ‘திருமந்திர நகர்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. தூத்துக்குடியின் பழம்பெயர் 'திருமந்திர நகர்' என்பதாகும்.
கயத்தாரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த குறுநிலமன்னனான சங்கரராம பாண்டியன், இத்தல இறைவனை தரிசித்து குழந்தைப் பேறு பெற்றதால் கோயில் எழுப்பினான்.
சங்கரராமப் பாண்டிய மன்னன் எழுப்பியக் கோயிலாததால் இத்தல இறைவனுக்கு சங்கர ராமேஸ்வரர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் சித்திரைப் பெருந்திருவிழா சிறப்பானதாகும்.
இத்திருக்கோயிலில் உள்ள ‘வாஞ்சா புஷ்கரணி’ என்ற கிணற்று தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தை வரம் தரும் அற்புதத் திருத்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது.
கோவிலில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுற காட்சி அளிக்கிறது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. இக்கோவிலை ஒட்டி பெருமாள் கோவிலும் உள்ளது. இறைவன் சன்னிதி முன்பு அர்த்தமண்டபம், மகா மண்டபம் உள்ளன.
இத்தல இறைவன் லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கியபடி இரண்டு திருக்கரங்களில் ஒரு கரத்தில் தாமரை ஏந்தியும், மற்றொரு கரத்தை இடையோடு தொங்க விட்டபடியும் பார்க்க ஒரு நாட்டிய மங்கைபோல் காட்சி அளிக்கிறார்.
இறைவன் எதிரில் உயர்ந்த கொடி மரம், நந்தி உள்ளன. அதனை கடந்தவுடன் வாசலின் இருபுறமும் சூரியன், சந்திரன் உள்ளனர். சூரியனை ஒட்டி அதிகார நந்தி கைகூப்பியபடி உள்ளார். கருவறை வாசலில் அழகிய விநாயகர் தனிச் சன்னிதியில் அருள்கிறார். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகார சன்னிதிகளாக தென்புறம் அறுபத்துமூவர், தென்மேற்கில் விநாயகர், அடுத்து புறச்சுற்றில் கிழக்கு நோக்கிய பஞ்ச லிங்கங்கள் உள்ளன. எதிரில் சிறிய நந்திகளும் உள்ளன.
இக்கோவிலில் சுவடி இருப்புக் குறித்து நடத்தப்பட்ட கள ஆய்வில் கிடைத்த 13 சுவடிக்கட்டுகளில் உள்ள 3 ஆயிரத்து 127 ஏடுகள் இருந்தன. இந்த சுவடிகள் பெரும்பாலும் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது. இதில் ஒரு பெரிய ஓலைச்சுவடியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவாரம் என்று அழைக்கப்படும் ஏழு திருமுறைகளும் மற்றொரு சுவடியில் பெரியபுராணமும், நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியும் உள்ளது.
மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவை நானூறு அகத்தியர் தேவாரத்திரட்டு, திருமுருகாற்றுப்படை நூலும் திருமந்திரம் நூல் சுவடியும் முழுமையாக இருந்தது. மேலும் பாகம்பிரியாள் திருப்பள்ளியெழுச்சி என்ற சுவடியும், பாகம்பிரியாள் இரட்டைமணிமாலை என்ற சுவடியும் இருந்தன.
ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம், வைகாசியில் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி, புரட்டாசியில் நவராத்திரி மற்றும் பாரிவேட்டை, ஐப்பசியில் திருக்கல்யாணம், கார்த்திகையில் சொக்கபனை ஏற்றுதல், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, தை மாதத்தில் தைப்பூசம் மற்றும் தெப்பத் திருவிழா, மாசியில் மகா சிவராத்திரி, பங்குனி மாதம் காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் மாங்கனி பெற்ற நிகழ்ச்சி,திருவாதிரை திருவிழா என பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் இக்கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. ஜன.3-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
திருவாதிரை திருவிழா நாட்கள் முழுவதும் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b