Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)
உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும் அவரவர் துறைகளில் பணி செய்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;
தமிழ்நாட்டில் உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம் என்ற பெயரில் வேளாண்
துறையின் பல்வேறு கிளைகளில் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளை ஒரே
குடையின் கீழ் கொண்டு வந்து, அனைத்துப் பணிகளையும் செய்யும்படி திமுக அரசு
கட்டாயப்படுத்துகிறது.
அதிகாரிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது
மட்டுமின்றி, உழவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை திமுக
அரசு தேவையின்றி திணிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் வேளாண் துறை,
தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண்
விற்பனைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தத்
துறைகளின் பணிகளும், நோக்கங்களும் வெவ்வேறானவை.
அதை கருத்தில் கொண்டு தான்
1979-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒன்றாக இருந்த இந்தத் துறைகள் காலப்போக்கில் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.
ஆனால், இப்போது உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம் என்ற பெயரில் இந்தத் துறைகளில் பணியாற்றும் கள அதிகாரிகள் அனைவரையும் ஒன்றாக இணைத்து, அனைத்துத்
துறை பணிகளையும் செய்ய வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக நெல் பயிர்கள் தொடர்பான ஆலோசனைகளை மட்டும் உழவர்களுக்கு வழங்கி வந்த உதவி வேளாண் அதிகாரிகள், இனி காய்கறிகள், பழங்கள் தொடர்பான தோட்டக்கலை பயிர்களுக்கும்ஆலோசனைகளை வழங்க வேண்டும். அனைத்துத் துறை அதிகாரிகளும் இனி நெல், கரும்பு, வாழை, காய்கறி பயிர், பசுமை குடில்களை கண்காணிப்பதோடு, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் செயல்படுத்தும் திட்டங்களையும் கண்காணிக்க வேண்டியிருக்கும். இது சாத்தியமற்றது.
அதிகாரிகள் எந்தெந்த துறைகளில் வல்லமை பெற்றிருக்கிறார்களோ, அவர்களை அந்தத் துறையின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வது தான் அறிவார்ந்த செயலாகும். வேளாண்மையில் வல்லமை பெற்ற ஒருவர் தோட்ட்க்கலைப் பயிர்களின் சாகுபடிகளுக்கு
ஆலோசனை வழங்கினால் அது பயனுள்ளதாக இருக்காது. அதேபோல், தோட்டக்கலை அதிகாரிகளுக்கு நெற்பயிர்களைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் கள அதிகாரிகளுக்கு பணிச்சுமை குறையும்; இதுவரை 10 முதல் 12 கிராமங்களை கவனித்து வந்த அதிகாரிகள் இனி 3
முதல் 4 கிராமங்களை கவனித்தால் போதுமானது என்று அரசுத் தரப்பில்
விளக்கமளிக்கப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் திட்டத்தின் மூலம்
உழவர்களுக்கு தவறான ஆலோசனைகள் வழங்கப்படலாம். இது வேளாண் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.
55 மாத திமுக ஆட்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் முதன்மையானது
வேளாண் துறை. கடந்த இரு ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து வருகிறது.
மேலும், மேலும் அத்துறையை சீரழித்து விடக் கூடாது. எனவே, உழவர் அலுவலர்
தொடர்பு 2.0 திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும் அவரவர் துறைகளில் பணி செய்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam