Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டத்தில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையிலும், பொள்ளாச்சி, பாலக்காடு, பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையிலும் கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே முதல் கட்டமாக ரூ.121 கோடி மதிப்பில் மேம்பாலமும், இரண்டாம் கட்டமாக ரூ.195 கோடியில் மேம்பாலமும் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
மொத்தமாக நில எடுப்பு பணிக்கு ரூ.152 கோடி செலவிடப்பட்டது. மொத்தம் ரூ.481.95 கோடி மதிப்பில் இரு மேம்பால பணிகளும் நடத்தி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டன.
இந்தப் பாலத்தில் மொத்தம் 7 ஏறு, இறங்கு தளங்கள் உள்ளன. இதில், 6 ஏறு, இறங்கு தள பணிகள் முடிக்கப்பட்டுன. இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பாலத்தின் மொத்த கட்டுமான நீளம் 3.8 கி.மீ., மொத்த தூண்களின் எண்ணிக்கை 125. இந்த நிலையில், கோவை ஆத்துப்பாலம்-உக்கடம் சந்திப்பு உயர்மட்ட மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் சூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு!
ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் மதிப்பிற்குரிய பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்கள்.
அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என மதிப்பிற்குரிய டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b