'ஹூக்கான்' மீன்பிடி முறையால் ஆமைகள் உயிரிழப்பு - மீனவர்களுக்கு அரசு எச்சரிக்கை
விழுப்புரம், 28 டிசம்பர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பிள்ளைச்சாவடி பகுதி மீனவர்கள் தடைசெய்யப்பட்ட ‘ஹூக்கான்’ மீன்பிடி முறையை பயன்படுத்துவதால் அழிவின் விளிம்பில் உள்ள கடல் ஆமைகள் அதிகளவில் உயிரிழந்து கரை ஒதுங்கி வருகின்றன. இதுதொடர்பா
Sea Turtles


விழுப்புரம், 28 டிசம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பிள்ளைச்சாவடி பகுதி மீனவர்கள் தடைசெய்யப்பட்ட ‘ஹூக்கான்’ மீன்பிடி முறையை பயன்படுத்துவதால் அழிவின் விளிம்பில் உள்ள கடல் ஆமைகள் அதிகளவில் உயிரிழந்து கரை ஒதுங்கி வருகின்றன. இதுதொடர்பாக மீன்வளத்துறை இயக்குனர், மீனவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் தாழங்குடா மற்றும் விழுப்புரம் பிள்ளைச்சாவடி கிராம மீனவர்கள், புதுச்சேரி கடல் பகுதிகளில் மீன்வளத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் 'ஹூக்கான்' முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். இது பாரம்பரிய மீனவர்களின் வலைகளைச் சேதப்படுத்துவதுடன், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

கடந்த 07.11.2025 அன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முறையை அறவே தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதை மீறினால், தமிழக அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் ரத்துசெய்யப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. அரசின் எச்சரிக்கை-ஐ மீறி, பிள்ளை சாவடி மீனவர்கள் தொடர்ந்து ஹூக்கான் முறையில் மீன்பிடித்து வருகின்றனர். நவம்பர் முதல் பிப்ரவரி வரை கடல் ஆமைகளின் இனப் பெருக்க காலம் என்பதால், அவை கடற்கரையை நோக்கி வருகின்றன.

இந்நிலையில், மீனவர்கள் பயன்படுத்தும் கயிறு, பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் சவுக்கை கொண்டு கட்டப்படும் ஹூக்கான் கருவிகளில் சிக்கி ஆமைகள் உயிரிழக்கின்றன.

கடந்த 22.12.2025 அன்று இரவு 10 மணியளவில், சின்னகாலாப்பட்டு கடற்கரையில் ஆமை ஒன்று கழுத்துப் பகுதியில் கயிறு சிக்கி உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது குறித்த காணொளி ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடல் ஆமைகளைப் பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இத்தகைய உயிரிழப்புகள் அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வானூர் மற்றும் பிள்ளைச்சாவடி மீனவ கிராமங்களில் உடனடியாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அழிவின் விளிம்பில் உள்ள கடல் ஆமைகளைப் பாதுகாப்பது மீனவர்களின் கடமை. தடையை மீறி ஹூக்கான் முறையைப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடல் வளத்தையும், பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என மீன் வளத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN