Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் தனியார் மின்சார பேருந்துகளுக்கு சாலை வரியில் இருந்து மூன்று ஆண்டுகள் முழுமையான விலக்கும், மாநில அரசால் நிறுவப்பட்ட டோல்கேட்டுகளில் இருந்து முழு டோல் கட்டண விலக்கும் அளிக்க வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழக அரசு மின்சார பேருந்துகளுக்கு ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கி வரும் சாலை வரி விளக்கு 31.12.2025 அன்று முடிவடைய உள்ள நிலையில் பொது போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு வரும் மூன்று ஆண்டுகளுக்கு சாலை வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
ஏனென்றால் தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து மின்சாரப் பேருந்து சேஸ்களை வாங்கி இந்தியாவில் பாடி கட்டி பேருந்துகளை இயக்குகின்றனர். இது தவிர மற்ற எந்த நிறுவனங்களும் மின்சார ஆம்னி பேருந்துகளை இன்று வரை இயக்கவில்லை.
ஏனென்றால் மின்சாரத் தயாரிப்பு நிறுவனங்களிடம் தொலை தூரத்திற்கு இயக்க ஏதுவாக மின்சார பேருந்துகள் தயார் நிலையில் இல்லை. கடந்த ஜூலை மாதம் ஆர்டர் செய்த 150 க்கு மேற்பட்ட மின்சார ஆம்னி பேருந்துகளே இன்று வரை எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.
தற்பொழுது தான் மின்சார பேருந்து உற்பத்தியாளர்கள் தொலைதூர இயக்க ஏதுவாக ஆம்னி பேருந்துகள் தரக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் மின்சார பேருந்துகளுக்கான அதிவேக சார்ஜிங் உள்கட்டமைப்பு பெருமளவில் இன்னும் உருவாக்கப்படவில்லை.
உளுந்தூர்பேட்டை பகுதியில் எங்கள் (அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தால்) நிறுவப்பட்டுள்ள பேருந்து சார்ஜிங் மையத்தைத் தவிர, மாநிலத்தின் பிற பகுதிகளில் அதிவேக சார்ஜிங் இன்னும் அமைக்கப்படவில்லை.
அதற்கான அடிப்படை வசதிகள் தற்போது தான் உருவாகி வருகின்றன. இந்த நடைமுறை சிக்கல்களால், தனியார் ஆம்னி மின்சார பேருந்துகள் தமிழகத்தில் பெரிய அளவில் இயக்கப்படவில்லை.
ஆகையால், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பொதுப் போக்குவரத்தில் EV மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், மின்சார தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் சாலை வரி விலக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தைப் போல தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மாநில அரசு டோல்கேட்டுகளில் மின்சார பேருந்துகளுக்கு டோல் கட்டண விலக்கும் வழங்கி, மாநிலம் முழுவதும் அதிவேக மின்சார பேருந்து சார்ஜிங் உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இந்த சலுகைகள் வழங்கப்பட்டால் மட்டுமே, தனியார் பேருந்து துறை EV மாற்றத்தை உறுதியாக ஏற்றுக் கொள்ளும், சுற்றுச்சூழல் மாசு குறையும்.
மேலும் தமிழக அரசின் Green Mobility மற்றும் Net Zero இலக்குகள் விரைவில் நிறைவேறும் என்று அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்
Hindusthan Samachar / P YUVARAJ