Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 28 டிசம்பர் (ஹி.ச.)
ரீல்ஸ் மோகத்தில் புதுச்சேரியில் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்ட பெண் சுற்றுலா பயணி 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
தொடர் விடுமுறை காரணமாக புத்தாண்டை கொண்டாடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் புதுச்சேரியில் குவிந்துள்ளனர். பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு
இடங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் அதிகளவில் பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாண்டி மெரினா பகுதியில் சுமார் 6.30 மணிக்கு பாறைகளுக்கு இடையே
நின்று கொண்டு ரீல்ஸ் எடுக்கும் போது பெண் சுற்றுலா பயணி ஒருவர் தவறி விழுந்தார்.
இதில் பாறைகளுக்கு இடுக்கில் அவர் சிக்கிக் கொண்டார். உடனடியாக
காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ
இடத்திற்கு வந்த அவர்கள் பாறைகள் பெரிய அளவில் இருந்ததினால் பெண்ணை மீட்க முடியவில்லை.
ஜேசிபி கிரேன் கொண்டு வந்து பாறையை நீக்கினால் தான் பெண்ணை மீட்க முடியும் என தெரிய வர உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டது. அப்பொழுது பாறைகளை
தாண்டி கிரேன் செல்ல சிரமம் ஏற்பட்டது. இதனால் உள்ளூர் இளைஞர்கள் பாறைகளை அகற்றி வழி ஏற்பாடு செய்தனர்.
இதனிடையே பெண் மீட்கப்பட்டால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 2 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்ட தயார் நிலையில் இருந்தன.
சுமார் இரண்டு மணி
நேரம் நடைபெற்ற மீட்பு பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பெரிய
பாறைக்கு பெல்ட்டை கட்டி விட கிரேன் உதவியுடன் பாறை நகர்த்தப்பட்டு பெண்ணை மீட்டனர்.
உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பெண் சுற்றுலா பயணி
மீட்கப்பட்ட சம்பவம் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையில் அவர் மதுரை சேர்ந்த வைஷ்ணவி (26)என்பதும் சென்னையில் மனநல பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது தெரிய
வந்தது.
பாண்டி மெரினா எதிரே உள்ள கடற் பகுதி பாதுகாப்பு இல்லாத பகுதி என்பதற்காக கூடுதலாக பாறைகள் போடப்பட்டுள்ளது. அதன் மீது நிற்க வேண்டாம். செல்பி எடுக்க வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதனை மீறியும் பலர் அங்கு சென்று செல்பி ரீல்ஸ் எடுப்பது தொடர்கதையாக இருக்கிறது.
இதனால் வருகின்ற புத்தாண்டுக்கு மெரினா கடற்கரை பகுதியில் பாதுகாப்பும் கட்டுப்பாடுகளும் கொண்டுவர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின்
கோரிக்கையாக உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam