Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச)
ஊதிய முரண்பாட்டை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டிபிஐ வளாகத்தை டிசம்பர் 26 ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தொடர்ந்த சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
அதன்படி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின்மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலர் ப.சந்திரமோகன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என இடைநிலை பதிவுமூப்புஆசிரியர்கள் இயக்கத்தின் மாநிலதுணை பொதுச்செயலாளர் வேல்முருகன் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, நேற்று (டிசம்பர் 27) காலை 10 மணியளவில் எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய ஆசிரியர்களின் போராட்டம் பிற்பகல் 3 மணி வரை நீடித்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைதான நிலையில் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 3-வது நாளாக இன்றும் (டிசம்பர் 28) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தை கைவிட போலீசார் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்து ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் கைதை கண்டித்து ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் திருவாரூர் மாவட்டம் கோட்டூரை சேர்ந்த ஆசிரியர் பாலமுரளி மயக்கம் அடைந்தார்.
அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b