Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 28 டிசம்பர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி தோடர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள மந்துகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் ஒன்றுகூடி ஆண்டுதோறும்
மொர்பர்த் என்று அழைக்கப்படும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு ஊட்டி அருகே முத்த நாடுமந்தில் மொர்பர்த் பண்டிகையை வெகு
விமரிசையாக கொண்டாடினர். இதையொட்டி அவர்கள் விரதம் இருந்து மூன்போ என்ற கோவிலில் வழிபட்டனர்.
தொடர்ந்து மூன்போ கோவிலில் இருந்து தோடர் இன மக்கள்
ஊர்வலமாக ஒர்யள்வோ என்ற கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் தரையை நோக்கி குனிந்து வழிபட்டனர். பின்னர் தோடர் இன மக்கள் மீண்டும் மூன்போ கோவிலுக்கு சென்று வழிபட்டு, காணிக்கை மற்றும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மேலும், அந்த கோவிலை சுற்றி நின்றபடி தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இந்த பண்டிகையில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு கோவிலுக்கு செல்வது வழக்கம். இதை அடுத்து தோடர் இன இளைஞர்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் இளவட்ட கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. வெண்ணெய் பூசப்பட்டு இருந்த சுமார் 70 கிலோ எடை கொண்ட கல்லை தோடர் இன இளைஞர்கள் தூக்கி, அதனை தோளில் வைத்து முதுகுக்கு பின்புறமாக கீழே போட்டு அசத்தினார்கள்.
நீலகிரியில் வாழும் 6 வகையான பழங்குடியினர் இன்றும் தங்கள் பாரம்பரியத்தை மாறாமல் தங்கள் பண்டிகைகளை கொண்டாடி வருவது பெரும் ஆச்சரியமாகவே உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam