Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 28 டிசம்பர் (ஹி.ச.)
திருச்சி திருவரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து 9ம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் முத்து திருநாரணன் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும்,.பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில்
ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த
19-ஆம் தேதி தொடங்கியது.
பகல் பத்து 9ம் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் நம் பெருமாள்
முத்து திருநாரணன் கொண்டை, முத்து அபய ஹஸ்தம், கடி அஸ்தம், முத்து அங்கி அணிந்து, ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், மகரி, சந்திர ஹாரம், சுட்டிப் பதக்கம், 2 வட முத்துமாலை, முத்து திருவடி, முத்துகர்ண பத்திரம் அணிந்து மூலஸ்தானத்தில்
இருந்து தங்க பல்லாக்கில் எழுந்தருளி அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி கோசத்துடன் நம்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
பின்னர் மாலை அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல்பத்து வைபவத்தின் 10ம் நாளான நாளை 29- ம் தேதி மோகினி அலங்காரத்தில்
நம்பெருமாள் காட்சி அளிப்பார்.
அதன் பின்னர் இராப்பத்து வைபத்தின் முதல் நாளான நாளைய மறுநாள் 30-ம் தேதி அதிகாலை 4.30- மணி அளவில் மூலஸ்தானத்திலிருந்து
புறப்பட்டு பரமபதவாசல் திறப்பு எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
அப்போது ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள்
அதிகாலை 5.45 மணிக்கு பரமபதவாசலை திறந்து கடந்து செல்வார்.
இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ரங்கா ரங்கா என பக்தி கோசத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் செய்து
வருகின்றனர்.
வைகுந்த ஏகாதேசி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும் வைகுந்த ஏகாதேசி பெருவிழாவிற்காக திருச்சி மாவட்டத்திற்கு வரும் 30-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam