Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 டிசம்பர் (ஹி.ச.)
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டில் அவரை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தார் என உள்ளூர் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கில், டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளான சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரீஷ் வைத்யநாதன் சங்கர் ஆகியோர் கொண்ட டெல்லி ஐகோர்ட்டு அமர்வு, செங்காருக்கு கடந்த 23-ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இளம்பெண் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, ரூ.15 லட்சம் பணம் செலுத்தி விட்டு, ஜாமீன் பெற்று செல்லலாம் என்ற நிபந்தனையின் பேரில் தண்டனையை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், செங்காரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன்பு பாதிக்கப்பட்ட இளம்பெண், அவருடைய தாயார் மற்றும் வழக்கறிஞர்-சமூக ஆர்வலரான யோகித பயானா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, சி.ஆர்.பி.எப். போலீசார் அவர்களை கைது செய்து பஸ்சில் அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
பெண்ணின் குடும்பத்தினரின் பாதுகாப்பு விசயங்களை கவனத்தில் கொண்டு, இந்த வழக்கில் ஜாமீன் அளிக்க கூடாது என இளம்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் சி.பி.ஐ. அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இந்த சூழலில், டெல்லி ஐகோர்ட்டின் இந்த உத்தரவை பெற்றதும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ. முடிவு செய்தது.
இதன்படி, எஸ்.எல்.பி. எனப்படும் சிறப்பு விடுமுறை மனுவை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
இந்நிலையில் சி.பி.ஐ.யின் அந்த மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம்கோர்ட்டில் நாளை (திங்கள் கிழமை) விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM