Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 28 டிசம்பர் (ஹி.ச.)
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பயணத்திட்டத்தின் படி அவர் டெல்லியில் இருந்து நாளை காலை 5.30 மணிக்கு தனி விமானத்தில் புறப்படுகிறார்.
காலை 10 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு வருகிறார்.
அவரை விமான நிலையத்தில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
விமான நிலையத்தில் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் புதுவை கம்பன் கலையரங்கத்துக்கு 10.20 மணிக்கு வருகிறார்.
அங்கு நடைபெறும் அரசு விழாவில், குமரகுரு பள்ளத்தில் ஸ்மார்ட்டி சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து 11.20 மணிக்கு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து பாரதியின் நினைவு இல்லத்தை பார்வையிடுகிறார்.
தொடர்ந்து 11.50 மணிக்கு குமரகுரு பள்ளத்தில் திறக்கப்பட்ட குடியிருப்புகளை அவர் பார்வையிட்டு, பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார்.
அங்கிருந்து 12.20 மணிக்கு மூலக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
பின்னர் மதியம் ஒரு மணிக்கு ராஜீவ்காந்தி சதுக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அவர் சாப்பிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
பின்னர் மதியம் 3 மணிக்கு காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் செல்கிறார். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
மேலும் சர்வதேச மாநாடு மையத்தை திறந்து வைத்து, 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றுகிறார்.
தொடர்ந்து 4 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு வந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.
குடியரசு துணைத்தலைவர் வருகையை முன்னிட்டு புதுவையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட ஏற்கெனவே சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி விடுதிகளில் யார் தங்கியுள்ளார்கள் என கண்காணித்து வருகின்றனர்.
மாநில எல்லைகளிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியரசு துணைத்தலைவர் வந்து செல்லும் பகுதிகளில் குறிப்பாக லாஸ்பேட்டை விமான நிலையம் முதல் கிழக்கு கடற்கரை சாலை, காலாப்பட்டு பல்கலைக்கழக சாலை சீரமைக்கப்படுகிறது.
நகர பகுதியில் உள்ள சாலைகளும் சீரமைக்கப்படுகிறது. குடியரசு துணைத்தலைவர் செல்லும் சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத்தலைவர் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு பணியில் 1500 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதோடு 4 கம்பெனி துணை ராணுவ பாதுகாப்பு படையும் புதுவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
புதுவையில் டிரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத்தலைவர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அவரது வாகனம் செல்லும் நேரத்தில் அந்தந்த சாலைகளில் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது.
Hindusthan Samachar / vidya.b