விஜயகாந்த் நினைவு தினம் - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் பேரணி
சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச) மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் நினைவு நாள், தேமுதிகவினரால் இன்று (டிசம்பர் 28) குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் விஜயகாந்த் நினைவுதினத்தையொட்டி மக்களுக்கு அன்னதானம் வழங்க தேமுதிக ஏற்பாடு
விஜயகாந்த் நினைவு தினம் - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் பேரணி


சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச)

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் நினைவு நாள், தேமுதிகவினரால் இன்று (டிசம்பர் 28) குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது.

இன்றைய தினம் விஜயகாந்த் நினைவுதினத்தையொட்டி மக்களுக்கு அன்னதானம் வழங்க தேமுதிக ஏற்பாடு செய்துள்ளது. விஜயகாந்தின் நினைவிடம் உள்ள கோயம்பேடு தேமுதிக அலுவலகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அங்குள்ள விஜயகாந்த் சமாதியிலும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டுள்ள மார்பளவு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கற்பூரம் ஏற்றி ஆராதனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் தேமுதிகவினர் பேரணி நடத்தினர். பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற்றது.

இதில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், சுதீஷ் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள், தேமுதிக தொண்டர்கள் பங்கேற்றனர்.

பேரணி தேமுதிக அலுவலகத்தை வந்தடைந்ததும், விஜயகாந்த் நினைவிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

மேலும் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா மாலை அணிவித்தார்.

பேரணியின் போது 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Hindusthan Samachar / vidya.b