Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 28 டிசம்பர் (ஹி.ச.)
தற்போது நடைபெற்று வரும் WhatsApp GHOSTPAIRING எனும் சைபர் மோசடி குறித்தும் அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போது வாட்ஸ்அப்பில் GHOSTPAIRING (பேய் ஜோடி) எனும் புதிய சைபர் மோசடி நடைபெற்று வருகிறது. இந்த மோசடியில் சைபர் குற்றவாளிகள் உங்கள் OTP அல்லது Password கேட்பதில்லை.
அதற்கு பதிலாக தெரியாத நம்பரிலிருந்து உங்கள் வாட்ஸ்அப்பிற்கு புகைப்படம் மற்றும் Link-ஐ சேர்த்து அனுப்பி, இணையதளத்தில் உங்கள் புகைப்படம் இருப்பதாக கூறி புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்றால் அந்த லிங்கை கிளிக் செய்து அதில் வரும் ஒரு Pairing Code-ஐ உடனடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் Linked Device-ல் இணைக்க வேண்டும் என கூறுவார்கள்.
அதனை நம்பி Pairing Code-ஐ உங்கள் வாட்ஸ்அப் Linked Device-ல் இணைத்தால் உங்களது வாட்ஸ்அப் முழுவதும் மோசடியாளர் கணினியில் இணைக்கப்படும். பின்னர் உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்பட்டு சைபர் மோசடிகள் நடக்க நேரிடும்.
தற்காப்பு வழிமுறைகள்:
இந்த வாட்ஸ்அப் GHOSTPAIRING மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்ள உங்களுடைய வாட்ஸ்அப்பில் மேலே உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி அதில் Linked Device உள்ளே சென்று அதில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கணினி இணைப்புகளையும் Logout செய்து விடவும். இதன் மூலம் மோசடியாளர்கள் உங்கள் வாட்ஸ்அப்பை அவர்களது கணினியில் பயன்படுத்துவதை உடனடியாக தடுத்து விடலாம்.
மேலும் பொதுமக்கள் இதுபோன்று வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் எந்த விதமான லிங்குகளை கிளிக் செய்து அதில் உள்ள எழுத்துக்கள், நம்பர் அல்லது QR Code போன்றவற்றை உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள Linked Device-ல் இணைக்க வேண்டாம் மற்றும் தெரியாத நம்பரிலிருந்து வரும் எந்தவிதமான லிங்குகளையும் திறக்க செய்ய வேண்டாம் எனவும், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் எனவும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பொதுமக்கள் நலன் கருதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930 என்ற எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகார் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b