Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச)
திரும்பிய திசையெல்லாம் போராட்டம் நடத்தும் மக்கள், மக்களின் துயரத்தை போக்காமல் கொண்டாட்டம் நடத்தும் முதலமைச்சர், ஆட்சியிலிருந்து அகற்றப்படுவது உறுதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
அரசு பள்ளிகளில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கும் உடனடியாக காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் சென்னையில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டமும், அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் மாற்றுத்திறனாளி தற்காலிக பணியாளர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தி சென்னையில் குடும்பத்துடன் தொடர்போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
அரசு பணியில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் எளிய மக்களை போராடும் சூழலுக்கு திமுக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை.
கடந்த 13 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பணி நிலைப்பு என்ற நியாயமான கோரிக்கையைக்கூட ஏற்க மறுத்து திமுக அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.
தமிழக அரசுத் துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்கப் பட வேண்டும் என்று கடந்த 2008&ஆம் ஆண்டு அக்டோபர் 16&ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 151-ஐயும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க சிறப்பு ஆள் தேர்வுகளை நடத்தலாம் என்று 2023&ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 20-ஐயும் செல்லாததாக்கும் வகையில் கடந்த அக்டோபர் 30&ஆம் தேதி 24 என்ற எண் கொண்ட அரசாணையை திமுக அரசு பிறப்பித்திருக்கிறது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும்.
அரசாணை எண் 24-ஐ ரத்து செய்து விட்டு, முந்தைய அரசாணைகளின் அடிப்படையில் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளி பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. ஆனால், அதைக் கூட நிறைவேற்றுவதற்கு திமுக அரசு மறுத்து வருகிறது.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், 181-ஆம் வாக்குறுதியாக திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், சொல்வதைச் செய்வதாகக் கூறிக் கொள்ளும் திமுக ஆட்சிக்கு வந்து 55 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடினால், அடக்குமுறையைத் தான் பரிசாக அளிக்கிறது திமுக அரசு.
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து நான்காம் நாளாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் இன்றும் கைது, அரசு ஊழியர்கள் போராட்டம், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் என தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது குறித்த எந்த கவலையும் இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பகுதிநேர சிறப்பாசிரியர்கள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்.
திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றுவார்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ