புதுக்கோட்டையில் உள்ள தொல்லியல் தலங்களை தொல்நடைக்குழு பார்வையிட்டனர்
புதுக்கோட்டை, 29 டிசம்பர் (ஹி.ச.) பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், தமிழ்நாடு வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையிலும், தொன்மையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை தொல்நடைக்குழு களப்பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகைய
Archeological Group


புதுக்கோட்டை, 29 டிசம்பர் (ஹி.ச.)

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், தமிழ்நாடு வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையிலும், தொன்மையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை தொல்நடைக்குழு களப்பயணம் மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை முத்தரைய மன்னர்களின் கலை படைப்புகளான விஜயாலய சோழீஸ்வரமான பழமையான கட்டுமானக் கோயில், பழியிலீசுவரம் என அழைக்கப்படும் சிவன் குடைவரை, சமணக்குடுகு என்றும் பதினெண் பூமி விண்ணகரம் என்றும் அழைக்கப்படும் விஷ்ணு குடைவரைக் கோயில் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

மேலும் கடம்பர் மலையில் சோழர், பாண்டியர் கல்வெட்டுகள், கோயில்கள், மலையடிப்பட்டி சிவன், விஷ்ணு முத்தரையர் குடைவரைகள், மேல்பகுதியில் உள்ள சமணப்படுக்கைகள் ஆகியவற்றை கண்டுகளித்தனர்.

அதே போல் குன்றாண்டார்கோயில் குன்றத்து நாயனார் குடைவரைக் கோயில், உருளும் சக்கரங்களோடு உள்ள பழமையான கலையரங்கம் ஆகியவற்றை வியப்போடு கண்டுகளித்தனர்.

தொல்நடை களப்பயணத்தின் நிறைவாக சங்ககாலக் கோட்டையாகக் கருதப்படும் பொற்பனைக்கோட்டைக்குச் சென்று வானளாவி நிற்கும் மதில் சுவரைப் பார்வையிட்டனர்.

இந்த களப்பயணத்தில் தொல்லியல் தலங்களின் சிறப்பை சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனரும், தொல்லியல் ஆய்வாளருமான கா.காளிராசா விளக்கிக் கூறினார்.

சிவகங்கையிலிருந்து தொடங்கிய இப் பயணத்தை சிவகங்கை தொல்நடைக் குழுத் தலைவர் நா. சுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

தொல்நடைப் பயணம் ஒன்பதிற்கான பயணக் கையேட்டை அவர் வெளியிட, சிவகங்கை தொல்நடைக் குழுவின் உறுப்பினரும் காவல் ஆய்வாளருமான சு. காளீஸ்வரன் பெற்றுக் கொண்டார்.

Hindusthan Samachar / ANANDHAN