Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 29 டிசம்பர் (ஹி.ச.)
மதுரையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாரியம்மன் கோவிலுக்கு அருகே உள்ள தெப்பக்குளத்திற்கு குப்பை , கழிவுகள் கலந்த மாசுபட்ட நீர் வழங்குவதைத் தடுக்க வேண்டும். குளத்திற்கு தண்ணீர் வரும் பனையூர் கால்வாயை சுத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், மற்றும் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தெப்பகுளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் பனையூர் கால்வாயில் விலங்குகளின் கழிவுகள் கொட்டப்படுகிறது.
மேலும் ,அருகில் உள்ள கடைகளின் குப்பைகள் அனைத்தும் பனையூர் கால்வாயில் கொட்டுவதால், குப்பைகள் தெப்பக்குளத்தில் குவிகிறது. இதனால் சுகாதார கேடு, துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பனையூர் கால்வாயின் பராமரிப்பிற்கு நீர்வளத் துறை பொறுப்பாகும். பனையூர் வாய்க்காலில், விலங்களின் கழிவுகளைக் கொட் டாமல் தடுப்பது மதுரை மாநகராட்சியின் பொறுப்பு.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில், கழிவுகள், குப்பைகள் வராமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மதுரை மாநகராட்சி ஆணையர், மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN