Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச)
தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடுகள், சமூக நீதி, நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துதல் ஆகிய துறைகளில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுகிறது.
மனித வள மேம்பாட்டுக் குறியீடு உள்ளிட்ட பல கூறுகளில் உத்தரப் பிரதேசம் பின்தங்கி உள்ளது. அனைவருக்குமான வளர்ச்சியை முன்னிறுத்தி சிறப்பான நிர்வாகத்தை அளிப்பதற்குப் பதிலாக “புல்டோசர் ஆட்சி” நடத்திவருகிறது. அந்த மாநிலத்தை எப்படி தமிழ்நாட்டோடு ஒப்பிட முடியும்?
கடன் குறித்துப் பேசும்போது அதன் பயன் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது அவசியம்.
தமிழ்நாடு பெற்றிருக்கும் கடன்கள் கல்வி, மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து, மின் உற்பத்தித் திறன், சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் நீண்டகால முதலீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மனித வள மேம்பாட்டை வலுப்படுத்தியுள்ளன.
மேலும், ஒன்றிய அரசின் நிதிக் கொள்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வரி வருவாயில் மிகப் பெரிய பங்களிப்பு செய்யும் தமிழ்நாடு, நிதி பங்கீட்டில் அதற்கேற்ற அளவு பெறுவதில்லை; அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அதிகளவிலான நிதிப்பங்கீட்டை பெறுவதோடு,ஒன்றிய அரசிடமிருந்து அனைத்து திட்டங்களுக்கும் தாராளமான நிதி ஒதுக்கீட்டைப் பெறுகின்றன.
ஆனால் தமிழ்நாடு தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. எத்தனை இயற்கைப் பேரிடர்கள் தமிழ்நாட்டை உலுக்கி எடுத்தாலும் , ஒன்றிய பாஜக அரசிடம் இருந்து நமக்கு உரிமையுள்ள ,நியாயமாகக் கிடைக்கவேண்டிய நிதியைக் கூட பெற முடிவதில்லை. கல்வி,நூறு நாள் வேலை வாய்ப்பு நிதிஒதுக்கீடு ,ஏன் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கூட மறுக்கப்படுகிறது அல்லது தாமதமாகக் கொடுக்கப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகளே ஆளுநர் மூலம் முடக்கப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கடன் பற்றி பேசலாம் .ஆனால் அதை சூழல், தரவுகள் மற்றும் விளைவுகள் இணைந்த நிலையில் தான் பேச வேண்டும்.
வளர்ச்சி முடிவுகள், ஒருவருக்கான சராசரி குறியீடுகள், வரி பங்களிப்பு-பங்கீடு விகிதம், நிர்வாகத்தின் தரம் ஆகிய நோக்குகளில் பார்த்தால் தமிழ்நாடு தெளிவாக முன்னிலையில் உள்ளது.
நம் மாநிலத்தின் சாதனைகளை நாமே குறைத்து மதிப்பிடுவது சரியல்ல.பாஜகவிற்கு ஆயுதம் எடுத்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ