Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 29 டிசம்பர் (ஹி.ச.)
மதுரை,தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை.
இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் 7 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை மத்திய அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு நியமித்தது. அதன்படி, குறுப்பிட்ட கால இடைவெளியில் இந்த குழுவில் உள்ளவர்கள் அணையை கண்காணித்து, சோதனை செய்து பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல் இயக்குநர் கிரிதர் தலைமையிலான அதிகாரிகள், கடந்த 15 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணை, துணை அணையில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவசர கால நீர்வழிப் போக்கிகளை இயக்கி ஆய்வு நடத்தினர்.
இதனையடுத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு நீர்வளத் துறையினர் அணையில் முக்கிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதே போல், கேரளா நீர்வளத்துறையினர் அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மூலமாக ஆய்வு செய்து, அணையின் உறுதி தன்மையை பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த பி. செந்தில், விஜய், ஜாலே லிங்கசாமி ஆகிய 3 விஞ்ஞானிகள் மற்றும் உதவி ஆய்வாளார் தீபக்குமாார் சர்மா ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர், நீரில் மூழ்கி படம் எடுக்கும் கருவியான ரிமோட் ஆபரேட்டர் வெகிக்கிள் (Remote Operated Vehicle) கொண்டு ஆய்வு மேற்கொள்ளும் பணியை கடந்த 22 ஆம் தேதி தொடங்கினர்.
இதற்காக ஆர்ஓவி கருவியை அணை பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஆய்வகக் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து ஆய்வு நடத்தினர்.
இந்த அதிநவீன கருவி நீருக்கடியில் மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கும் சென்று, கட்டுமானத்தின் உறுதித்தன்மையை துல்லியமாக ஆய்வு செய்து, புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற வந்த இந்த ஆய்வு இன்று முடிவு பெற்றுள்ளது. இதனால், அதிகாரிகள் நீரில் இருந்த ஆர்ஓவி கருவியை வெளியே எடுத்தனர்.
தொடர்ந்து ஆய்வு முடிவை டெல்லியில் உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் இதுபோன்று ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் 14 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN