Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 29 டிசம்பர் (ஹி.ச.)
ரவுடியிஸ திமுக ஆட்சியில் சிறார்கள் கொலை வெறியுடன் திரிவதாக திருத்தணி சம்பவத்தை மையப்படுத்தி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவர் மீது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அதை “ரீல்ஸ்” ஆகப் படம்பிடித்துப் பதிவிட்டுள்ள சம்பவம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது.
புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு கனவுகளோடு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய இளம் பருவத்தினர், பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தி போதையில் இப்படித் தடம் புரள்வதைப் பார்க்கையில் ஒருபுறம் வேதனையாகவும், மறுபுறம் பயமாகவும் உள்ளது.
சகமனிதரை இரத்தம் சொட்டச் சொட்ட தாக்கியது மட்டுமன்றி, அதைக் காணொளியாகப் படம் பிடித்துச் சிலாகிக்குமளவிற்கு சிறார்களின் மன ஆரோக்கியம் போதைப் பழக்கத்தில் சிதைந்து கிடப்பது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தானது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க களத்திற்கு வராமல் சினிமா பாணியில் காணொளி வெளியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சட்டம் ஒழுங்கோ சமூகவலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது.
பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன், கண்டித்தால் கொலை செய்வேன் என்று சொல்லும் ரவுடிகளின் கூடாரமான திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததன் பாவத்தை தான் தற்போது தமிழகம் தாங்கி நிற்கிறது. அனைத்திற்கும் கூடிய விரைவில் ஒரு முடிவு கட்டப்படும்!
தமிழகம் மீட்கப்படும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Hindusthan Samachar / GOKILA arumugam