Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 29 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் (SIR) நடைபெற்றது.
தேர்தல் அலுவலர்கள் மூலம் ஆங்காங்கே வார்டு வாரியாக விவரங்கள் பெறப்பட்டு, பிரத்யேக தேர்தல் ஆணைய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல், அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் மாநில அளவில் மொத்தம் 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டது. இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 15.18% பேர் ஆகும்.
குறிப்பாக, தேனி மாவட்டத்தில் 1.25 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்ட வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டம், போடி ஒன்றியத்தில் உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முந்தல், ஆதி திராவிடர் காலனி, முட்டம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் ஒரே கதவு எண்ணில் 93 வாக்குகள் இருப்பதாக பட்டியல் வெளியானதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், கடந்த முறை வெளியான வாக்காளர்கள் பட்டியலிலும் இதே நிலை இருந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து வாக்காளர்களின் முகவரிகளை சரிபார்த்த போது, வார்டு எண் என்பது வாக்காளர்களின் கதவு எண்ணாக மாறியுள்ளதாகவும், அதனை உடனடியாக சரி செய்யும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் போடி வட்டாட்சியர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் போல் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் குழப்பம் உள்ளதாகவும், அதனை சரி செய்யும் பணிகளில் வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலை சரிபார்க்கும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN