புதுச்சேரி குமரகுருபள்ளத்தில் கட்டப்பட்டுள்ள 216 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு
புதுச்சேரி, 29 டிசம்பர் (ஹி.ச) புதுச்சேரி ராஜ்பவன் சட்டமன்ற தொகுதி அண்ணாசாலை மற்றும் வள்ளலார் சாலை சந்திப்பில் 0.4577 எக்டர் பரப்பளவு கொண்ட குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட ஏழு அடுக்குமாடி கு
அடுக்குமாடி குடியிருப்பு


புதுச்சேரி, 29 டிசம்பர் (ஹி.ச)

புதுச்சேரி ராஜ்பவன் சட்டமன்ற தொகுதி அண்ணாசாலை மற்றும் வள்ளலார் சாலை சந்திப்பில் 0.4577 எக்டர் பரப்பளவு கொண்ட குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட ஏழு அடுக்குமாடி குடியிருப்புகளில் 224 வீடுகள் பாழடைந்து அச்சுறுத்தி வந்தன.

பாதுகாப்பு கருதி, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவுறுத்தலின்படி சிதிலமடைந்து இருந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டன.

இந்த இடத்தில் வசித்தவர்களுக்கு வீட்டு வசதி வழங்குவதற்காக பொதுப்பணித் துறையின் சிறப்பு கட்டடங்கள் கோட்டம் மூலம் 216 குடியிருப்புகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் 13 தளங்களாக அதாவது, தரைத்தளம் மற்றும் 12 அடுக்குமாடி தளம் கொண்ட பிரிகாஸ்ட் கான்கிரீட் தொழில்நுட்ப முறையில் 45.50 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது.

இந்த கட்டடத்தின் தரைதளம் முழுதும் பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 12 தளங்களில் 216 குடியிருப்புகள் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு குடியிருப்பிலும் ஹால், படுக்கை அறை, சமையல் அறை கழிப்பறை மற்றும் பொது பயன்பாட்டு பகுதி வசதிகள் உள்ளன.

ஒரு குடியிருப்பின் பரப்பளவு 372 சதுர அடிகள் கொண்டது.

பொது உபயோக இடமாக, படிக்கட்டு, காரிடர், ஷாப்ட் பகுதி, லிப்ட் பகுதி, பார்க்கிங் பகுதி, ஒரு குடியிருப்புக்கு 160 சதுர அடி விடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ஒரு குடியிருப்பின் உபயோக பரப்பளவு 532 சதுர அடியாக விடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடியிருப்பும் 21 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டது. மொத்தமுள்ள 216 குடியிருப்புகளில் 209 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலமாக பயனாளிகளுக்கு வழங்காமல் இருந்துவந்தது தற்போது புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெரும் விழாவில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பயனாளிகளுக்கு வீட்டு சாவியை ஒப்படைத்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam