Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 29 டிசம்பர் (ஹி.ச.)
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நீடிக்கும் நிலையில் ராமதாஸ் தரப்பு பா.ம.க., சார்பில், சேலத்தில் இன்று (டிசம்பர் 29) பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதில், 'சட்டசபை தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பாமக தலைவராக ராமதாஸ், பொதுச்செயலாளராக முரளிசங்கர் மற்றும் கவுரவ தலைவராக ஜி.கே.மணி அக்கட்சி செயற்குழு கூட்டத்தில் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாமக பொருளாளராக சையத் மன்சூர் உசேனை தேர்வு செய்து தீர்மானமும், தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் துரோகத்தை வீழ்த்துவோம், ராமதாஸின் கரத்தை வலுப்படுத்துவோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ''அன்புமணியின் செயல்களால் ராமதாஸ் மனம் உடைந்து இருக்கிறார்.
பொதுக்குழு கூட்டத்தின் மேடையில் பேசும் போதே ராமதாஸ் கண் கலங்கினார் .
தொடர்ந்து அவர் பேசியதாவது:
அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை எனக் கூறி கனவில் தாயிடம் அழுதேன். ஒரு கும்பல் என்னையும், கவுரவத் தலைவர் ஜி.கே.மணியையும் தூற்றுகிறது.
என்னை மார்பில் ஈட்டியால் அன்புமணி குத்துகிறார். அன்புமணி பின்னால் 5 சதவீதம் பேர் கூட இல்லை. தேர்தலில் அன்புமணிக்கு சரியான பதிலடி தருவோம். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணி என கேட்டால், ராமதாஸ் நல்ல கூட்டணி அமைப்பார். அது வெற்றி கூட்டணியாக இருக்கும் என சொல்லுங்கள். என்னை கொல்ல வேண்டும் என பதிவு போட்டவருக்கு அன்புமணி பொறுப்பு கொடுத்திருக்கிறார்.
சென்னையில் சொத்து தகராறில் தந்தையை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றார் மகன். அதை விட அன்புமணி மோசமாக நடக்கிறார். என்னை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று இருக்கலாம். ஒவ்வொரு நாளும் சில்லறை பசங்களை வைத்து என்னை அவமானப்படுத்துகிறார். 5 ஆண்டுகள் அன்புமணியால் பொறுத்திருக்க முடியாதா? என மூத்த டாக்டர்கள் கேட்கிறார்கள்.
அன்புமணியை மாற்ற முடியாது, மாற்ற வழியில்லை. பாட்டாளி மக்கள் என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. எந்த பதவியையும் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்ற சத்தியத்தை நான் காப்பாற்றி வருகிறேன். கோடிக்கணக்கில் பணத்தை வைத்து பம்மாத்து வேலை செய்கிறார் அன்புமணி.
பதவியை பெறுவதில்லை என்ற எனது சத்தியத்தால் தான் அன்புமணி அமைச்சரானார். அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்.
என்னை மோசமாக சித்தரிப்பதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b