மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு
திருவனந்தபுரம் , 29 டிசம்பர் (ஹி.ச.) கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல காலம் கடந்த நவம்பர் 17ம் தேதி தொடங்கி டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. அன்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டது. முந
மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை  நடை திறப்பு


திருவனந்தபுரம் , 29 டிசம்பர் (ஹி.ச.)

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல காலம் கடந்த நவம்பர் 17ம் தேதி தொடங்கி டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது.

அன்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டது. முந்தைய வருடங்களை விட இம்முறை அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.

இந்த மண்டல காலத்தில் 42 நாட்களில் 36.61 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆன்லைன் முன்பதிவு மூலம் 30.56 லட்சம் பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 4.15 லட்சம் பக்தர்களும், புல்மேடு வழியாக 1.31 லட்சம் பக்தர்களும் சபரிமலைக்கு வந்தனர். கடந்த வருட மண்டல சீசனில் 32.49 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடந்த வருடத்தை விட 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இம்முறை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோயில் மொத்த வருமானமும் இந்த வருடம் அதிகரித்துள்ளது. இந்த வருடம் கிடைத்த மொத்த வருமானம் ரூ. 332 கோடியே 77 லட்சத்து 5 ஆயிரத்து 132 ஆகும்.

இந்நிலையில் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை (டிசம்பர் 30ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

மறுநாள் (31ம் தேதி) முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்குகின்றன.

ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.

இதற்கிடையே நாளை முதல் ஜனவரி 14ம் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு அனைத்தும் முடிவடைந்து விட்டது.

Hindusthan Samachar / vidya.b