Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 29 டிசம்பர் (ஹி.ச.)
திருச்சி மாவட்டத்தில் பூலோகத்து வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உலகப் பிரசித்திப் பெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் துவங்கியது. மறுநாள் முதல், பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது.
பகல் பத்து உற்சவத்தின் 10ம் நாளான இன்று (டிசம்பர் 29) நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பெருமாள் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார்.
சௌரிக் சாயக்கொண்டை சாற்றி, அதில் கலிங்கத்துராய், சூரிய- சந்திர வில்லை, சிகப்புக் கல் நெற்றிப்பட்டை, முத்துப்பட்டையை பக்க வாட்டில் கொண்டையில் அணிந்து, காதில் வைர
மாட்டல் ,தோடு, ஜிமிக்கி, வலது திருமூக்கில் மூக்குத்தி அணிந்து,
திருமேனியில் பங்குனி உத்திர பதக்கம்; தாயார் வைரத் திருமாங்கல்யம், தொங்கல் பதக்கம்; வரிசையாக அடுக்கு பதக்கங்கள், பெரிய பவழ மாலை, காசு மாலை, 2 வடமுத்து மாலை, வலது திருக்கையில் தங்க கோலக்கிளி, இடது திருக்கையில் வரிசையாக வில்வ பத்ரம், தாயத்து சரங்கள், வளையல், பவழ கடிப்பு, வில்வ பத்ர தொங்கல் சாற்றி, திருவடியில் - சதங்கை, தண்டை அணிந்திருந்தார்.
பின் சேவையாக, பின்னல் ஜடை, அதன்மேல் ஜடை தாண்டா, திருமுடியில் கல் இழைத்த ராக்கொடி, ஜடைக்கு மேல் - நாகம் வைத்த கல் இழைத்த ஜடை தாண்டா; புஜ கீர்த்தி, கச்சு எடுத்து கட்டி, அதில் அரைச் சலங்கை தொங்க விட்டுக் கொண்டு, ரங்கூன் அட்டிகை, ஒட்டியாணம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து, வெண்பட்டு உடுத்தி, வலது திருவடியை மடித்து அமர்ந்தும், இடது திருவடியை, திருக்கை தாங்க அமர்ந்தும், அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நம்பெருமாள் நாச்சியாரக சேவை சாதிப்பார் என்பதால் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்ய வருகை தந்திருந்தனர்.
விழாவின் அதி முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க் கவாசல் திறப்பு நாளை (டிசம்பர் 30) அதிகாலை 5.45 மணிக்கு நடைபெறுகிறது.
Hindusthan Samachar / vidya.b