Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச.)
காஞ்சிபுரம், தேவராஜ சுவாமி கோவிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச முத்திரை மரியாதை நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது,
அறநிலையத்துறை தரப்பில், காஞ்சி காமகோடி பீடம் - சங்கர மடம், ஸ்ரீ அகோபில மடம், நாங்குநேரி ஸ்ரீ வாணாமலை மடம், மைசூர் ஸ்ரீ பரகால ஜீயர் மடம், உடுப்பி ஸ்ரீ வியாசராயர் மடம், சோசலே ஆகிய ஐந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கோவிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை, ஒருபோதும் உரிமையாக கோர முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
மடாதிபதிகளுக்கு மரியாதை வழங்குவது குறித்து, அறநிலைய சட்டப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள்.
இது சம்பந்தமாக அறநிலையத் துறை
அதிகாரியை அணுகி நிவாரணம் கோரலாம் என மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam