புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சீரழிவை அனுமதிக்க முடியாது - அர்ஜூன் சம்பத்
தூத்துக்குடி, 29 டிசம்பர் (ஹி.ச.) தூத்துக்குடியில் தர்ம சேவா அறக்கட்டளை சார்பில் உள்நாட்டில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் மூன்று நாள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து க
Arjun Sampath


தூத்துக்குடி, 29 டிசம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடியில் தர்ம சேவா அறக்கட்டளை சார்பில் உள்நாட்டில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் மூன்று நாள் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்,

பாரத நாடு வல்லரசு நாடாக உருவாக உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார்.

எனவே, நாம் இந்தியராக இருப்போம். இந்திய பொருட்களையே வாங்குவோம். இந்தியப் பொருட்களை வாங்குவதற்கு பள்ளிகளில் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு விழா, பாரதப் பிரதமரின் சுதேசி பொருட்களை மேம்படுத்தக்கூடிய விழாவாக அமைந்துள்ளது என்றார்.

தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி பற்றி பேசிய அவர், தென் மாவட்டங்கள் தொழில், கல்வியில் பின்தங்கி உள்ளது. நீண்டகாலமாகவே தமிழகத்தில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

சென்னை, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் அரசு புதிய திட்டங்கள் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் தென் மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

தென் மாவட்டங்களில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால், தென் மாவட்டங்களில் மின் திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வருவதாக இருந்தால் அதனை சில அமைப்புகள் திட்டமிட்டு தடுத்து வருகின்றன. துறைமுகம், விமான நிலையம் இருந்தும் தென் மாவட்டங்கள் வளரவில்லை. தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வ.உ.சி பெயரை சூட்ட வேண்டும் என்றார்.

டாஸ்மாக் கடைகள் தொடர்பாக பேசிய அவர்,

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதி டாஸ்மார்க் மதுக்கடைகளுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

ஆங்கில புத்தாண்டை மையமாக வைத்து நடைபெறும் கேளிக்கைகள் போன்ற ஆபாச கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம் என்கிற பெயரில் கலாச்சார பண்பாடு சீரழிக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN