ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த தம்பதி உயிரிழப்பு - உறவினர்கள் இருவர் கைது!
திருவண்ணாமலை, 29 டிசம்பர் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குமார் அவரது மனைவி பூங்கொடி இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர், இவர்களுக்கும் அவரது உறவினர்களான கணவன், மனைவியான சரவணன் மற்றும் பிர
TVM Collector Office


திருவண்ணாமலை, 29 டிசம்பர் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குமார் அவரது மனைவி பூங்கொடி இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர், இவர்களுக்கும் அவரது உறவினர்களான கணவன், மனைவியான சரவணன் மற்றும் பிரியா. இவர்களுக்கிடையே வீட்டின் அருகே உள்ள ஒன்றரை அடி இடம் சம்பந்தமாக கடந்த 15 ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த ஒன்றரை அடி இடத்தை குமார் குடும்பத்தினர் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி காலை இடத்தை நிலஅளவை அலுவலர்கள் அளவீடு செய்து அந்த ஒன்றரை அடி இடம் சரவணன் குடும்பத்திற்கு சொந்தமானது என கூறி சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அலுவலகம் முன்பு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து கணவன் மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.

இதனை அறிந்த காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு தீயணைப்பாணை பயன்படுத்தி இருவரையும் காப்பாற்றி உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த பூங்கொடி நவம்பர் 13 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்‌.

மேலும் அவரது கணவன் குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 12.05 மணி அளவில் பரிதாபமாக அவரும் உயிரிழந்துள்ளார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக அவர்களது உறவினர் கணவன் மனைவியான சரவணன் மற்றும் பிரியா ஆகியோரை ஏற்கனவே கடலாடி காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

ஒன்றரை அடி இடத்தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகம் மற்றும் நுழைவாயில் முன்பு 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிர சோதனைக்கு பின்னரே பொது மக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே அனுமதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN