Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 29 டிசம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வால்பாறை, ஆழியார், கவியருவி, டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆழியார் அணைக்கு கோவை மாவட்ட பகுதி மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர் மற்றும் பல்வேறு வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரசு விடுமுறை மற்றும் முக்கிய விஷேச நாட்களின்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
கடந்த சில நாட்களாக ஆழியார் அணைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ் ஆகிய வாகனங்களில் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையை தொட்டுள்ள பூங்காவை கண்டு ரசிகின்றனர். மழையின்றி வெயிலின் தாக்கம் இருந்தாலும் வெகு நேரம் நின்று அணையில் ரம்மியமாக உள்ள தண்ணீரின் அழகை கண்டு ரசிகின்றனர்.
கவியருவியில் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் பயணிகள் வெகுநேரம் நின்று குளித்து மகிழ்கின்றனர். பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், காலையிலிருந்து நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாக உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வெகுநேரம் காத்திருக்கின்றனர்.
இருப்பினும் சில சுற்றுலா பயணிகள் குளிக்காமல் திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது. கவியருவியில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் , அங்கு வந்த சுற்றுலா பயணிகளில் பலரும் அருவியருகே குளம்போல் தேங்கிய தண்ணீரில் குளித்து செல்கின்றனர்.
கூட்டம் அதிகரிப்பால் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் ஏற்படுத்திய வாகன நிறுத்தும் இடம் முழுவதும் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அடுத்தடுத்து வந்த வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால் அங்கு வந்த சுற்றுலா வாகனங்கள், வால்பாறை மலைப்பாதை முக்கிய சாலையோரத்தில் நிறுத்தும் நிலை ஏற்படுகிறது . இதில் நவமலை பகுதிக்கு யாரேனும் தடையை மீறி செல்கின்றார்களா என வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வெகு நாட்களுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வந்திருந்தனர் எனவும், அடுத்து புத்தாண்டு விடுமுறை மற்றும் 4ம் தேதி வரை பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால், வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b