Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 29 டிசம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன.
கடந்த காலங்களில், இந்த சாலை மிகவும் குறுகலாக இருந்ததால் வாகன போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறியது.
இதையடுத்து, கடந்த 2008ம் ஆண்டில், 38.620 கி.மீ., துாரத்திற்கு 273.6 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலை போடப்பட்டது. இதில் சில முக்கிய சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்காததால் இன்னமும் தொடர் விபத்துகள் நடைபெற்றன.
இது மட்டுமின்றி கிராம சந்திப்புகளில் விளக்குகள் பொருத்தாததால், சாலையை கடக்கும் போது விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகவே உள்ளது.
இதையடுத்து முக்கிய சந்திப்பு கிராமங்களில், இரட்டை விளக்கு அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. இதற்காக விபத்துகள் நடக்கும் பகுதிகள் கணக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 13 இடங்களில் விளக்குகள் இல்லாததால் விபத்துகள் ஏற்படுவது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி - திண்டிவனம் சாலையில், நாவற்குளம், மாட்டுக்காரன் சாவடி, மொரட்டாண்டி, இடையஞ்சாவடி சந்திப்பு, ஆண்டியார்பாளையம், ஒழிந்தியாப்பட்டு, அருவாப்பாக்கம், தேற்குணம், கோவடி, மொளசூர், எண்டியூர், எடையான்குளம், திண்டிவனம் ஐமெட் மருத்துவமனை எதிரில் என மொத்தம் 13 சந்திப்புகளில் இரட்டை விளக்கு அமைக்க கம்பம் நடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு இடங்களிலும் 8 விளக்கு வீதம் மொத்தம் 104 இரட்டை விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b