Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 29 டிசம்பர் (ஹி.ச.)
காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகத்தில் ஆண்டுதோறும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
இந்த சாகுபடியில் தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.
இந்த கொள்முதல் நிலையங்கள் திறப்பது, அதற்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்த முத்தரப்பு ஆலோசனை கூட்டத்தினை நடத்தி உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி தஞ்சாவூரில் இன்று சம்பா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
.இதில் 10 அமைச்சர்களும், 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும், தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் நோக்கம் குறித்து உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது,
கடந்தசெப்டம்பர் 1 ம் தேதி முதல் 1,943 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நடப்பாண்டில் டிசம்பர்26-ம் தேதி வரை 14.83 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு இதே நாளில் 5.31 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட நடப்பாண்டில் 9.53 லட்சம் டன் கூடுலதாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் சம்பா கொள்முதலுக்காக 4,706 கொள்முதல் நிலையங்களை திறக்கவும், 8,056 பணியாளர்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 3,914 நெல் தூற்றும் இயந்திரங்களும், 54,715 தார்பாய்கள், 4.52 கோடி சாக்குகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், கொள்முதல் நிலையங்களை கண்காணித்திட மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசி நடைமுறை மாற்றங்களால் 10 டன் அளவில் இருந்து 21 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் செறிவூட்டப்பட்ட அரிசி 25 கிலோவில் இருந்து 50 கிலோவாக மாற்றப்பட்டு, செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் அரவை அரிசியோடு கலக்கப்படுகிறது.
தற்போது மாலை 6 மணி வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இரவு 8 மணி வரை நெல் கொள்முதல் செய்யவும், நாளொன்றுக்கு 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்யவும், அதற்கு தேவையான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிபடி நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 என கடந்த செப்டம்பர் மாதம் முதல் விலை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு சம்பா கொள்முதலில் எவ்வித தொய்வும் ஏற்படாத வகையில் அதற்கான அனைத்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன, என்று கூறினார்.
கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன், எம்பிக்கள் ச.முரசொலி, வை.செல்வராஜ் மற்றும் எம்எல்ஏக்கள், அரசு துறை செயலாளர்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b