Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு , 3 டிசம்பர் (ஹி.ச.)
பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து, உயர் விளைச்சல் பெறும் விவசாயிகள், மாநில அளவில், 'பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் ரக பாதுகாவலர்' விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பூங்கார், கருங்குறுவை, சீவன் சம்பா, காட்டுயானம், துாயமல்லி, மாப்பிள்ளை சம்பா, அறுபதாம் குருவை, கருப்பு கவுணி, சீரக சம்பா, தங்க சம்பா உள்ளிட்ட பல்வேறு வகையான, பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளன.
பாரம்பரிய நெல் ரகங்களில் அதிக விளைச்சலை பெறும் விவசாயிகளுக்கு, முதல் பரிசு 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 50,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், மாநில அளவில் நடைபெறும் 'பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் ரக பாதுகாவலர்' விருது, பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்கலாம்.
இதற்கு, குறைந்தபட்சம் 5 ஏக்கரில், பாரம்பரிய நெல் ரகம் சாகுபடி செய்திருக்க வேண்டும். அதில், 50 சென்ட் பரப்பளவில் உள்ள பயிரை, போட்டிக்காக அறுவடை செய்ய வேண்டும். நில உடைமைதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் ஆகியோர் போட்டியில் பங்கு பெற தகுதியுடையவர்கள்.
மாநில அளவிலான பரிசுகள், அறுவடை தேதியிலிருந்து பெறப்பட்ட அதிகபட்ச மகசூல் அடிப்படையில் வழங்கப்படும். பயிர் விளைச்சல் போட்டிக்கான கடைசி அறுவடை, 2026 மார்ச் 15ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள், நுழைவு கட்டணம் 150 ரூபாய் செலுத்தி, சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநரிடம் படிவத்தை பூர்த்தி செய்து, அறுவடை தேதிக்கு 15 நாட்கள் முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் .
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b