Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர், 3 டிசம்பர் (ஹி.ச.)
எல்லையில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்தும், சட்டவிரோத கடத்தல் டிரோன்களின் முக்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இது குறித்து எல்லை பாதுகாப்பு படையின் மேற்கு ஏடிஜி சதீஷ் காண்டரே கூறியதாவது;
பஞ்சாப் மற்றும் ஜம்முவில் அதிகரித்து வரும் டிரோன் ஊடுருவல் அச்சுறுத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத டிரோன்கள் மூலம் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க ஒரு புதிய ஒருங்கிணைந்த அமைப்பு எல்லையில் நிறுவப்பட்டுள்ளது.
டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தப்படும் முக்கிய இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டில் மட்டும் இதுவரை 380 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின், 200க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே போல, 278 சட்டவிரோத டிரோன்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமிர்தரசில் டிரோன் தடயவியல் ஆய்வகம் எல்லைப் பாதுகாப்பு படையினரால் அமைக்கப்பட்டுள்ளது. எல்லையில் பறிமுதல் செய்யப்படும் டிரோன்கள் இந்த ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, அதன் பயணப்பாதை மற்றும் எத்தனை முறை எல்லையில் ஊடுருவியுள்ளது, அந்த டிரோன் எடுத்து வந்த பொருட்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆய்வுகளின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தும் முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. டிரோன் தடுப்பு தொழில்நுட்பங்களை நிறுவுவதற்காக, எல்லை பாதுகாப்பு படையின் நிபுணர்கள் பஞ்சாப் அரசுக்கு உதவிகரமாக உள்ளனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் டிரோன்கள் தங்களின் தொடர்பு அதிவெண்ணை (Communication frequency) மாற்றிக் கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதால், அதனை கண்டறிவது மிகவும் சவாலானதாக உள்ளது. எனவே, இதனை சமாளிக்கும் விதமான தொழில்நுட்பங்களை நாங்கள் கண்டறிந்து வருகிறோம்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் சில இடங்களில் நீர் தேக்கம் இருப்பதால், அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் செல்ல முடியாத நிலை உள்ளது. அதே போல, 65 கி.மீ., தொலைவில் வேலி சேதமடைந்துள்ளன. இந்த இடைவெளியை தேச விரோத சக்திகள் பயன்படுத்த முயற்சிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM