Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 3 டிசம்பர் (ஹி.ச.)
கோவையில் பெருகும் தொழில் நிறுவனங்கள் மற்றும் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகளால் நில மதிப்பு மூன்று மடங்கு உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் மாநகரமாக கோவை உள்ளது. இங்கு ஐ.டி தொழில் மையங்கள், மோட்டார் பம்ப் தொழிற்சாலைகள், பவுண்டர்கள், மின்னணு வாகன தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
அங்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இது தவிர கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவு நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள் தேவை அதிகரித்து வருகிறது.
இதனால் கட்டுமான தொழிலும் லாபகரமாக இயங்கி வருகிறது. அதற்கு ஏற்ப இரண்டாம் நிலை நகரமான கோவையில் நில மதிப்பு உயர்ந்து வருகிறது. மாநகருக்குள் நில மதிப்பு சதுர அடிக்கு குறைந்தபட்சம் ரூபாய் 9,000 முதல் அதிகபட்சம் ரூபாய் 18,000 அல்லது அதற்கு மேல் வரை உயர்ந்து உள்ளது. இது இருப்பிடத்தை பொறுத்து மாறுபடுகிறது.
அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் கோவையில் நில மதிப்பு மூன்று மடங்கு உயர்ந்து உள்ளதாக தெரியவந்து உள்ளது.
கட்டுமான நிறுவனத்தினர் கூறும் போது,
பெரும்பாலும் வீடு வாங்குபவர்கள் ரூபாய் 75 லட்சத்திற்கு குறைவான சொத்துக்களின் பட்ஜெட் வகையில் கீழ் வருகிறார்கள்.
அவிநாசி சாலை, காளப்பட்டி, சரவணம்பட்டி மற்றும் கணபதி ஆகிய புதிய வளரும் பகுதிகளாக கருதப்படுகின்றன.
மேற்கு புறவழிச் சாலை பணி முடிவு அடைந்தால், மாநகர வளர்ச்சிக்கு மேலும் உதவிகரமாக அமையும். கிழக்கு புறவழிச் சாலை அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan