Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 3 டிசம்பர் (ஹி.ச.)
ஆண்டு இறுதியில் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
டிச 1 ஆம் தேதி தொடங்கியது.
இந்த தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில், இன்று (டிச 03) திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது,
தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து இந்திய தொழிலாளர்கள், மாலியில் உள்ள ஒரு தனியார் மின் நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்தனர். 6 நவம்பர் 2025 அன்று, அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் அவர்களை கடத்திச் சென்றனர். இதுவரை அவர்களது நிலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்; அவர்கள் உயிருடன் உள்ளார்களா, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் அறிய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை மீட்டு, பாதுகாப்பாக இந்தியாவிற்கும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கொண்டு வருவதற்கு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b