Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.)
வங்கக்கடலில் உருவான ‘டித்வா' புயல், கடலோரப் பகுதிகள் வழியாக கடந்து சென்று மழையை கொடுத்து இருக்கிறது.
சென்னை கடலோரப் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தஞ்சம் அடைந்திருந்த டித்வா புயல், மேற்கத்திய தாழ்வுநிலையில் இருந்து அதாவது, இமயமலையில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்றை ஈர்த்து வலுவான மேகக்கூட்டங்களை உருவாக்கத் தொடங்கியது.
இதனால் சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் மழை வெளுத்து வாங்கியது.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரத்திலும் இடைவெளி விட்டுவிட்டு மழை பெய்தது. ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும், பல இடங்களில் கனமழையும் கொட்டித்தீர்த்தது.
சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கனமழை காரணமாக ஏரிக்கான நீர்வரத்து 1, 300 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அதாவது மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 22 அடியை எட்டியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று
(டிச 03) காலை 8 மணி முதல் வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதே சமயம் அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b