Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணம் இன்றி உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசத்தை 2026 மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு வணிகர் நல வாரியம் வணிகர் பெருமக்களின் நலனுக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக 1989ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்று வரை தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டம், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் மற்றும் தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற / பதிவு பெறாத வணிகர்களின் உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை 1,13,118 ஆகும்.
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் வாயிலாக, சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் (GST) சட்டத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகர்கள் வருடத்திற்கு விற்று முதல் அளவு (Turn Over) ரூ.40 லட்சம் வரை வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கு வாரியத்தின் பலனை பெறும் வகையில் உறுப்பினராவதற்கான கட்டணத் தொகையான ரூ.500ஐ செலுத்துவதிலிருந்து 01.12.2025 முதல் 31.03.2026 வரையிலான நான்கு மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b