Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 3 டிசம்பர் (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் 4-ம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயிலில் கார்த்திகை பெருவிழா 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் கார்த்திகை பெருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
கார்த்திகை பெருவிழாவினை முன்னிட்டு நாள்தோறும் காலையில் படிச்சட்டத்திலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. திருக்கார்த்திகை தினமான இன்று (டிச 03) அதிகாலை மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தங்க கவசம், வைரவேல் அணிவிக்கப்பட்டன.
பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மூலவர் சுவாமிநாத சுவாமியை தரிசனம் செய்தனர். பிறகு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலையில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருத்தேரில் எழுந்தருள, நூற்றுக்கணக்கானோர் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இன்று (டிச 03) இரவு தங்க மயில் வாகனத்தில் பிரகார உலாவும், அதனை தொடர்ந்து கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெறுகிறது.
Hindusthan Samachar / vidya.b