Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு, பரணி கார்த்திகையான நேற்று (டிச 02) பக்தர்கள், உபயதாரர்கள் வாயிலாக, 150-க்கும் மேற்பட்ட விளக்குகள் வழங்கப்பட்டன.
அவற்றில், 108 விளக்குகள் வள்ளி, தேவசேனா சுப்பிரமணியர் சன்னதியில், பக்தர்கள், உபயதாரர்கள் வாயிலாக ஏற்றப்பட்டன. மூலவர் சன்னதியில், 36 குத்து விளக்குகள் ஏற்றப்பட்டன.
இந்த நிலையில், கார்த்திகை மகா தீபத் திருநாளான இன்று (டிச 03) அதிகாலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 6:30 மணிக்கு அபிஷேகம் முடிந்தவுடன், மூலவருக்கு விசேஷ ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
பகல் 12:00 மணிக்கு உச்சிகாலத்தில் வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது. மாலை 5:00 விசேஷ வஸ்திர சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறவுள்ளது. இன்று மாலை 6:00 மணிக்கு கார்த்திகை பூஜை நடத்தப்படுகிறது.
மேலும், 27 நட்சத்திரங்கள், நான்கு கோபுரங்கள், எட்டு சன்னதிகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இரவு 8:30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்களுடன் பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b