Enter your Email Address to subscribe to our newsletters

வாராணசி , 3 டிசம்பர் (ஹி.ச.)
காசி மற்றும் தமிழகத்தின் பண்பாடு, ஆன்மிகம் மற்றும் வரலாற்றுத் தொடர்புகளின் நிகழ்ச்சிகளைப் பிரதிபலிக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (பிஎச்யூ) ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
‘தமிழ் கற்கலாம்’ எனும் கருப்பொருளில் இந்த ஆண்டுக்கான ‘காசி தமிழ் சங்கமம் 4.0’ நிகழ்ச்சி வாராணசியில் நேற்று (டிச 02) தொடங்கியது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்த இந்த விழா வரும் 15-ம் தேதி வரை பல்வேறு தலைப்புகளில் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சென்னைஐஐடி இயக்குநர் வீ.காமகோடி, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் ஆர்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து, 3 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தொல்காப்பியம் நூல் விழாவில் வெளியிடப்பட்டது. இந்தி பயிலும் மாணவர்கள் 15 நாட்களில் அடிப்படைத் தமிழை கற்கும் வகையில் 5 தொகுப்புகள் கொண்ட புத்தகங்கள் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டன.
நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது,
தமிழக கலாச்சாரம் உத்தரப் பிரதேசத்தில் உயிர்ப்புடன் உள்ளது. எங்கள் அரசு தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் வளர்ச்சிக்கு செயலாற்றி வருகிறது. அந்தவகையில், காசி தமிழ் சங்கமம் தொடர்ந்து 4-வது ஆண்டாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி வட இந்தியாவில் கலாச்சாரம், பொருளதாரம், சமூகப் பங்களிப்பை மேம்படுத்த வழிவகை செய்கிறது.
பிரதமர் மோடியின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ இலக்கை பூர்த்தி செய்யும் வகையில் இதுபோன்ற தொடர் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்காசியில் நேற்று முன்தினம் தொடங்கிய வாகனப் பயணம் 2,000 கி.மீ. கடந்து காசியை வந்தடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது,
தமிழகத்தில் மொழியை வைத்து வேற்றுமையை உருவாக்கி வருகிறார்கள். குறுகிய அரசியல் எண்ணத்துடன், அரசியல் லாபத்துக்காக இதை செய்கின்றனர். ஆண்டுதோறும் காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்கும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறேன்.
இம்முறை மீண்டும் அவரை அழைக்கிறேன். காசிக்கு வந்து பாருங்கள். தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள நீண்டகால தொடர்பு உங்களுக்கு தெரியவரும். அதை நாங்கள் எவ்வாறு கொண்டாடுகிறோம் என்பதை அறிய முடியும். எங்களிடம் மொழிப் பாகுபாடு இல்லை.
சுயநல சக்திகள்தான் அதை உள்நோக்கத்துடன் பயன்படுத்துகின்றனர். அரசியலில் வேண்டுமெனிலும் இத்தகைய செயல்பாடுகள் வெற்றி பெறலாம். ஆனால், மக்களிடம் நன்மதிப்பை பெற முடியாது. இந்த நிகழ்ச்சி மூலமாக தமிழகத்துக்கும், காசி இடையே அறிவுப் பாலத்தை உருவாக்கியுள்ளோம்.
பன்மொழி கலாச்சாரம் நம் நாட்டின் பலமாகும். ஆங்கிலேய மோகத்தில் இருந்து வெளியேற மொழிதான் முக்கியக் காரணியாக இருந்தது. அதனால், தாய்மொழி மட்டுமல்ல, இந்திய மொழிகள் அனைத்தையும், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதன்படி, உத்தரப் பிரதேச மக்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில்,
காசி மற்றும் தமிழகம் இடையேயான உறவு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன் இங்கே வந்து, நீர் எடுத்து சென்று கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டினார்.
சனாதன தர்மத்தை, டெங்கு, மலேரியா போல ஒழிப்போம் என்று தமிழகத்தில் சிலர் பேசி வருகின்றனர். மக்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். பனராஸ் இந்து பல்கலை.யில் பாரதியாருக்கு இருக்கை ஏற்படுத்தி கவுரவிக்கப்பட்டுள்ளது. என்று கூறினார்.
புதுச்சேரி ஆளுநர் கைலாசநாதன் பேசும்போது,
உலகின் மிகவும் பழமையான நகரமாக காசி இருக்கிறது. இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மீதான அன்பு பரஸ்பரமாக இருந்து வருகிறது.
காசி மக்களின் மொழியில், பண்பாட்டில் தமிழ் அடையாளங்கள் இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி தமிழகம், காசி இடையேயான பண்பாடு, கலாச்சாரத்தை மேம்படுத்தும். என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b