Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.)
அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பின்னடைவுக் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாது என்ற திமுக அரசின் அரசாணை மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி சகோதரர்களுக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கடந்த 2 ஆண்டுக் காலமாக ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது அதனை ஒருபோதும் நிரப்ப முடியாது என்று சத்தமின்றிப் புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. உதவித்தொகை உயர்வு, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் அவல நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது கொடுங்கோன்மையாகும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 21.04.23 அன்று “அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் விரைவில் கண்டறியப்பட்டு, அவை சிறப்பு ஆட்சேர்ப்புத் தேர்வின் மூலம் நிரப்பப்படும்” என்று அறிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து கடந்த 24.07.23 அன்று அதற்கான அரசாணையும் (எண் 20/2023) பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த இரண்டாண்டு காலமாகச் சிறப்பு ஆட்சேர்ப்புத் தேர்வுக்கான பணிகள் நடந்து வருகின்றன, விரைவில் நிரப்பப்படும் என்று பச்சைப் பொய்யை மீண்டும் மீண்டும் கூறி மாற்றுத்திறனாளி பெருமக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது அந்த அரசாணையைச் செயல்படுத்த இயலாது என்று கூறி, அதனை இரத்துச் செய்வதாக மற்றொரு அரசாணையை நிறைவேற்றியுள்ளது மாற்றுத்திறனாளி பெருமக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகம் ஆகும்.
அத்தோடு, ‘அரசுத்துறையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்’ எனக் கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையையும் (எண் 151) ரத்து செய்துவிட்டு, தொகுப்பூதியத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் போட்டித்தேர்வில் பங்கேற்றால், அவர்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் மாற்றுத்திறனாளிகளை அரசுப்பணிகளிலேயிருந்தே அகற்றும் கொடுஞ்செயலாகும்.
இவ்விரு புதிய அரசாணைகள் மூலம் திமுக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை சிதைத்து, அவர்களை மீள முடியா இருளில் தள்ளியுள்ளது. இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? இதற்குப் பெயர்தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திராவிட மாடலா? தன்னுடைய ஆட்சியில் ‘ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடக்கூடாது’ என்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் அவர்கள், ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளையும் பெருந்துயரத்தில் தள்ளியது ஏன்? இன்னும் எத்தனை காலத்திற்கு திமுக அரசு இப்படி போலி வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றப்போகிறது? மாற்றுத்திறனாளி பெருமக்களுக்கு அரசால் வழங்கப்படுவது சலுகைகள் அல்ல, அது அவர்களின் அடிப்படை உரிமைகள் என்பதை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படும்போதுதான் உண்மையான சமூகநீதியை மண்ணில் மலரச் செய்ய முடியும்.
ஆகவே, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார உரிமையைப் பறிக்கும் இரண்டு புதிய அரசாணைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று, அரசுத்துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பழையபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், முதல்வர் வாக்குறுதி அளித்தபடி அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி சகோதரர்களுக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பறிக்கும் தமிழ்நாடு அரசின் இரண்டு அரசாணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் பார்வை மாற்றுத்திறனாளி சங்கங்கள் இன்று (03.12.2025) உலக மாற்றுத்திறனாளிகள் நாளினை கருப்பு நாளாக கடைபிடித்து முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவை அளித்துக் கோரிக்கை வெல்லும்வரை துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ