Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 3 டிசம்பர் (ஹி.ச.)
புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்தன.
இதில், தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த சட்டங்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
கார்ப்ரேட் காட்டாட்சி வேண்டாம், தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் என்ற பேனருடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM