Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 3 டிசம்பர் (ஹி.ச.)
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த தொழுவூர் ஏரி நிரம்பி வழிந்து செவ்வாப்பேட்டை ரயில் சுரங்க பாதையில் குளம்போல் தண்ணீர் நிற்கிறது. மேலும், அங்கு ரயில்வே சுரங்க பாதை பணிகளும் நடைபெற்று வருவதாலும் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் 8 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை இருந்து வருகிறது. இவ்வாறு மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கினால் செவ்வாப்பேட்டை பகுதியில் பொதுமக்கள், நோயாளிகள் சுரங்கப்பாதையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, கிடப்பில் போடப்பட்டிருக்கும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேப் போன்று டிட்வா புயல் காரணமாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. பொன்னேரியில் அதிகபட்சமாக 20 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
இதனால் போக்குவரத்து மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தொடர் மழையின் காரணமாக பழவேற்காடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. காலை முதல் பரவலாக கனமழை பெய்து கொண்டிருப்பதால் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மீட்பு பணிகள் துரிதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்து இருந்த நிலையில், மின் மோட்டார்கள் மூலமாக தாழ்வான பகுதியில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து தண்ணீர் செல்லக்கூடிய வழியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கிட்டதட்ட 1500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN